நீல பாய் விருச்சி நீட்டி
அளக்கற
ஒளிய குழம்பாக்கி வெளியில வீசுற
பூமிய சுத்தவச்சு,
சூரியன பத்தவச்சு,
நிலவ இருட்டுல கண்முழிக்க
வச்சியோ!
அறிவ வெதச்சு ஆழம்பாக்குற
கொஞ்சம் ஆட்டம் காட்டிபுட்டா
அறுவடைக்க
நாள் கேட்குற!
அஞ்சு முகங்காட்டி
என்ன அரவணைக்க பாக்குற
பின்ன அஞ்ச ஒன்னாக்கி
என்ன ஆட்டிபடைக்கிற
(பூச்சாண்டி
புயலா, புன்னகைக்கும் தென்றலா
ஆழ்பறிக்கும்
ஆழியா, வான் சுரக்கும் மாரியா
சுடரொளியா, சுடும்
வலியா
விதை நிலமா, புதைக்குழியா
திறந்த வானா, வான்வழியா)
விண்ணுல உன்னத்தேட
விண்கலம் செய்ஞ்சு தந்தாயோ
மண்ணுல நீ இருக்கேனு
மலைய நட்டுவச்சயாயோ
தூண துரும்பாக்கி
தூசிதட்டி பாக்குறன்
கண்ணில் பட மாட்டாயோ,
காதில் விழ மாட்டாயோ
நான் கைக்கூப்பி
மட்டும் நிற்கும் கற்சிலையோ
----
விண்ணுலயும் நான்
இல்ல,
மண்ணுலயும் நான்
இல்ல
உன் மனசுக்குள்ளதான்
நான் இருக்கேன்!
தூணுலயும் நான் இல்ல
துரும்புலயும் நான்
இல்ல
தூய அன்பில் மட்டுமே
நான் இருப்பேன்!